Selvapperundhakai requested that Comrade Nallakannu be awarded the Bharat Ratna
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-02-26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் என அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு ஐயாவின் மறைவு, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவு தமிழர்கள் தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பு. ஒரு மனிதன் இப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று சொன்னால் அடுத்த தலைமுறை நம்புமா? என்று தெரியாது. அப்படிபட்ட நேர்மையான தலைவர், எந்தவித ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இல்லாத தலைவர், சுதந்திர போராட்ட வீரர். தோழர் நல்லகண்ணுவிற்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். உயரிய மனிதர், இந்த தேசம் கண்டிராத மனிதர், தோழர் நல்லகண்ணுவிற்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இப்படிப்பட்ட மனிதர் வாழ்ந்தார் என்று அடுத்த தலைமுறை பார்க்கின்ற வகையில் அவருடைய வாழ்க்கையை பின்தொடர்கின்ற வகையில் அவருக்கான மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். அடுத்த தலைமுறை இவரை படிக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசும், முதல்வரும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
Follow Us