தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாணிக்கம் தாகூர் அவருடைய கருத்தை அவர் முன் வைத்திருக்கிறார். அவர் நாடாளுமன்ற கொறடா ஆவார்.  நாடாளுமன்ற  சீனியர் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைமை தெளிவாக இருக்கிறது. 

Advertisment

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி குறிப்பாக மாநில பொறுப்பாளர் கிரிஸ்டோபர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளரிடம் தெளிவாகச் சொன்னார். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மட்டும்தான் கூட்டணி பேசி கொண்டிருக்கிறோம் என்று கூறினார். எந்த கட்சிதான் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியும். கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம் என்று  சொன்னார். எந்த தலைமை தலைமை என்றாலும், அகில இந்தியத் தலைமை, தலைவர் ராகுல் காந்தி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவராக உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன்  முடிவெடுப்பார்கள். 

Advertisment

நான் திருப்பி திருப்பி சொல்கிறேன் இந்தியா கூட்டணி என்பது வலிமையான கூட்டணி ரொம்ப வலிமையா இருக்கிறது. இதை அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனை அசைக்க முடியாது. அவரவர்கள் கருத்துச் சொல்வதற்குக் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது. எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரோடு நாங்கள், எங்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) எது தேவையோ நாகரிகமாகக் கேட்போம். நாகரீகமாகப் பெறுவோம்” எனப் பேசினார்.