பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. 

Advertisment

அந்த வகையில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதியம் 02.45 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களிலும், இந்தியா கூட்டணி 34 இடங்களிலும், மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. முதன் முதலாக தேர்தலைச் சந்தித்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸுக்கு எப்போதும் பின்னடைவு கிடையாது. காங்கிரஸ் பேரியக்கம். அதிகாரத்தை சுவைக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் மட்டும் தான் என்று கிடையாது. இது மக்களுக்கான இயக்கம். குறிப்பாக முகம் இல்லாதவர்களுக்கும், பேச்சுரிமை இல்லாதவர்களுக்கான இயக்கம் தான் காங்கிரஸ் பேரியக்கம். வெற்றி, தோல்வியைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது. இது மக்கள் இயக்கம். இயங்கி கொண்டே இருக்கும். பீகாரில் தோல்வி என்று சொல்ல முடியாது. வெற்றி வாய்ப்பை இழுந்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், வெற்றி வாய்ப்பை இழந்தால் கவிழ்ந்து படுக்கும் இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம் கிடையாது. என்றைக்கும் மக்கள் குரலாக இருக்கும். இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் 17 லட்சம் வாக்குகள் பீகாரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகம் வீழ்ந்து விடக்கூடாது. ஜனநாயகம் வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது. ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும். யாராவது ஜனநாயகத்தை வீழ்த்த நினைத்தால் மக்கள் வெகுண்டு எழ வேண்டும் இது தான் ஜவஹர்கலால் நேருடைய பிறந்த நாளில் எங்களுடைய பிரகடனம்” எனப் பேசினார்.

Advertisment