Advertisment

“பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோதப் போக்கிற்கு மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்” - செல்வப்பெருந்தகை!

selvaperunthagai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணியா? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. 

Advertisment

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக இது அமைந்திருக்கிறது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தனது உரையின் பெரும் பகுதியை செலவழித்திருக்கிறார். இந்தியாவிலேயே பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு  பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் தொடர்ந்து எதிர்த்து வருவதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன. இதனால் தான் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்காமல் மக்கள் தோற்கடித்து பாடம் புகட்டினார்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு திணிப்பிற்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநரும், குடியரசுத் தலைவரும் மறுத்து வருகிறார்கள். கல்வித்துறைக்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 3458 கோடி. தமிழ்நாடு மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று கூறி இந்தி மொழியை ஒன்றிய அரசு திணிக்க முயல்கிறது. 

modi-ani-mic

இது நேரு வழங்கிய உறுதிமொழிக்கும், ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்திற்கும் எதிரானதாகும். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து முடக்கி வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஒப்புதல் தர மறுக்கப்படுகிறது. கிராமப்புற மக்களின் வறுமையை ஒழித்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்து புதிய சட்டத்தின் மூலம் நிதியை கடுமையாக குறைத்து மாநிலங்கள் மீது சுமையை ஏற்றியிருக்கிறது. இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட மொத்த தொகை ரூபாய் 37,907 கோடி. ஆனால், ஒன்றிய அரசு வழங்கியதோ ரூபாய் 682.67 கோடி. கோரிய தொகையில் இது வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே. 

காவிரி டெல்டா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் கொள்முதலின் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்ற தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்தது. இதை விட விவசாயிகள் விரோதப் போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கும் ஒன்றிய அரசு வழிவகுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்திருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு எதிரான போக்கை மோடி அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

nda-alliance

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் அக்கறையிருப்பதாக வேடம் போடுகிற நரேந்திர மோடி ஆட்சியில், 2014 முதல் 2025 வரை 84,000 மக்கள் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 2532.59 கோடி. ஆனால், செம்மொழித் தகுதி பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னக மொழிகளுக்கு வழங்கிய மொத்த தொகை ரூபாய் 147.56 கோடி. இதன்மூலம் தமிழுக்கு ஆண்டுக்கு சராசரியாக வழங்கிய தொகை ரூபாய் 11 கோடி மட்டுமே. இந்நிலையில், தமிழைப் பற்றியோ,திருக்குறளைப் பற்றியோ பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதியிருக்கிறது? 

கடந்த 7 ஆண்டுகளில் வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது ரூபாய் 7.38 லட்சம் கோடி. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு திரும்பக் கொடுத்ததோ ரூபாய் 2.56 லட்சம் கோடி. ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிப் பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. எனவே, தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Alliance Assembly Election 2026 b.j.p congress NDA Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe