முன்னாள் அமைச்சரும், திமுகவின் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ்நாடு தலைநிமிர, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் எஸ். கவிதா, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு இந்த பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த பதிவு தொடர்பாக கரூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது?. கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில்  உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

Advertisment

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், “எனக்கு நேற்றைக்குத்தான் இந்த தகவலை சொன்னார்கள். அது மாதிரி செய்யக் கூடாது . ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஒரு கட்சியில் இருக்கும் பொறுப்பாளரை நியமித்தார் என்று ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதன்பிறகு நானும் இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அப்புறம் அந்த ட்வீட் பதிவு நீக்கப்பட்டது. 

Advertisment

இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட அசௌகரியங்கள் நிகழ கூடாது. இது போன்று செய்வதால் என்ன ஆகிறது என்றால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத்தான் இவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய (காங்கிரஸ் கட்சி) வேண்டுகோள். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ரொம்ப பெருந்தன்மையானவர். இதனைப் பெருந்தன்மையோடுதான் அணுகி அவர் இருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிய மரியாதையும் மதிப்பும் அளிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மாண்பைப் பாதுகாக்க வேண்டியது எல்லோருடைய பொறுப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.