சட்டமன்ற கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (23-01-26) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கி அதற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை பேசியதாவது, “முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எவ்வளவு தாக்குதல் வந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுகொடுக்க மாட்டேன் என்று தைரியமாக நின்று தமிழ்நாட்டு மக்களின் தலைமகனாக முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த இந்த தீர்மானம் மூலம், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது என்ற பெயரை அவர் ஈட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த தீர்மானத்தை இந்தியாவிலேயே எந்த சட்டப்பேரவையிலும் கொண்டு வரவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் நலனை யார் காட்டி கொடுத்தாலும், மறைமுகமாகவோ அல்லது முகமூடிகளை அணிந்து டெல்லிக்கு அடகு வைத்தாலும் தனி ஒரு மனிதனாக தமிழ்நாட்டை காப்பேன் என்று உறுதியோடு நிற்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் எதற்கும் அஞ்சாதவர்கள், தைரியமானவர்கள், ஏழை எளிய மக்களை பாதுகாப்பவர்கள் என்ற வரிசையில் இங்கு படமாகவும் பாடமாகவும் இருக்கின்ற புகைப்படங்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்து காட்டி கொண்டிருப்பவர் தான் நம்முடைய முதல்வர். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் விசில் அடிக்கிற குஞ்சுகள் அல்ல, அந்த கூட்டத்தின் தலைவரும் அல்ல. தன்மான தலைவன் என்பதை இந்த தீர்மானத்தின் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார்” என்று கூறினார்.
Follow Us