காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை கடந்த 5ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவரும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்தார்

Advertisment

இந்த சூழலில் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் வாங்கியுள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்றும் திமுக அரசை விமர்சித்து பிரவீன் சக்கரவர்த்தி பதிவை ஒன்றை வெளியிட்டார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

Advertisment

பிரவீன் சக்கரவர்த்தியின் அந்த பதிவால், திமுக கூட்டணிக்குள் குழப்பம் உள்ளதாக விவாதத்தை கிளப்பியது. மேலும், திமுக அரசை விமர்சித்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் விவகாரத்தில் தோழமை கட்சிகள் தலையிட வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எங்கள் கட்சியில் என்ன பிரச்சனையோ அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் எங்களுடைய தோழமை கட்சிகளும், காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்த வேண்டாம். ஏற்கெனவே பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் ஏற்கெனவே பரிந்துரை செய்துவிட்டோம். தமிழ்நாட்டு மக்களை எந்த விதத்திலும் தலை குணிவை ஏற்படுத்தினாலும், தமிழக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொன்னாலும், அது யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது. தோழமை கட்சிகள் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். தோழமை கட்சிகள் இதை விட்டுவிட வேண்டும் என்று நட்போடு சொல்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம். இது யாருக்கும் நன்மை கிடையாது. சங்கடத்தை தான் மேலும் மேலும் ஏற்படுத்தும். இந்தியா கூட்டணியில் ஜனநாயகம் இருக்கிறது” என்று கூறினார். 

Advertisment