வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் ஆகியவை விரைவாக நிரம்பி வருகிறது.

Advertisment

அதன்படி, குன்றத்தூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நீர் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. நேற்று மாலை முதற்கட்டமாக 100 அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 500 அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டி குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக மக்கள் பிரதிநிதியான தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்ற ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏவும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். அதிகாரிகளிடம் அவர் பேசியதாவது, “ஒரு மக்கள் பிரதிநிதி சேர்மனுக்கும் தெரியல, மந்திரிக்கும் தெரியல, எம்.எல்.ஏ எனக்கும் தெரியல, எம்.பிக்கும் தெரியல.. நீங்களே திறந்து விட்டீங்கனா என்ன சார் இது? இந்த துறை அரசு துறைதானே. மக்கள் பிரதிநிதிகிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன? கால காலமா எப்பவுமே சொல்லி தானே திறக்கப்படுது. நானும் மூணு வருஷமா திறந்து விட்டிருக்கேன். போன வருஷமும் சொல்லாமல் திறந்துட்டீங்க...  

நீங்களே ஆட்சியாளர்களா, நீங்களே மக்கள் பிரதிநிதியா மாறுங்க.. இப்ப நான் தானே ஊர் ஊரா போக போறேன். 500 அடி திறந்துட்டாங்க கொஞ்சம் கவனமாக இருங்க என நான் தானே ஊர் ஊரான சொல்ல போறேன். இதுயெல்லாம் தப்பு இல்லையா. நீங்களே மக்கள் பிரிதிநிதியா ஆகிட்டா எதற்கு அரசாங்கம்?. அதிகாரிகளே அரசாங்கத்தை நடத்திடலாமே?. இந்த துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியல” என்று கடிந்து கொண்டார். 

Advertisment