தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்து விட்டது. அதோடு தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவும் நேற்று (09.01.2026) பிரமாண்ட மாநாடு நடத்தியுள்ளது. இந்த மாநாடு தேமுதிக தொண்டர்களிடையே மிகப் பெரிய நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இவ்வாறாக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. மற்றொருபுறம் ஆளும் திமுகவின் கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்குக் காரணம் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தான் எனக் கூறப்படுகிறது. காங்கிரசின் சில நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியமைக்கும் என்று அவ்வப்போது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இது திமுக உட்பட மற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளிடத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தவெகவுடன் காங்கிரஸ் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. இத்தகைய கருத்துக்கள் திமுக உட்படக் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செய்தியாளர்களுக்குப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ் எப்போதும் கொல்லைப்புற அரசியல் செய்யாது. நேர்மையான முறையில் மட்டும் தான் அரசியல் செய்யும்.
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும். வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை, கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு தான் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யும். இந்த குழுவின் தலைவர் ஜோடங்கர், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து கட்சித் தலைமை அமைத்துள்ள குழு மட்டும் தான் பேச வேண்டும். கூட்டணி குறித்தோ, ஆட்சியில் பங்கு குறித்தோ காங்கிரஸ் நிர்வாகிகள் பொது வெளியில் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அது வரம்பு மீறிய செயல், எனவே அவ்வாறு பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/selvaperunthagi-pm-3-2026-01-10-21-51-27.jpg)