அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நாளை (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காகத் தமிழக அரசு மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று (26.07.2025) தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி அவர் இன்று இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை இரவு 08:30 மணியளவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 09:40 மணிக்குத் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நன்பகல் 12 மணிக்குக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதோடு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிற்பகல் 02.25 மணிக்கு மீண்டும் திருச்சி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகத் தமிழ்நாட்டில் அவர் எந்தெந்த மாவட்டங்களுக்குச் செல்கிறாரோ அந்த மாவட்டங்களில் கறுப்புக்கொடி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நடைபெறும். ஏனென்றால் தொடர்ந்து தமிழ்நாட்டு நலனைப் புறக்கணித்து வரும் பிரதமர் மோடி, குறிப்பாக அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற பள்ளிக் கல்வித்துறைக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க மறுதளிக்கிறார். 2வது தமிழ்நாட்டின் பாரம்பரியம், தமிழ்நாட்டுடைய வரலாறு, உலகத்தின் மூத்த மொழி தமிழ்மொழி என்று சொல்லுகிறோம். வெளிநாடுகளுக்கு அவர் போகும்போது தமிழைப் பற்றி திருக்குறளைப் பற்றிப் பேசுகிறார்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கீழடி அகழ்வாராய்ச்சி உடைய உண்மையான அறிக்கையை மாற்றி எழுதித் தரும்படி அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குக் கொடுக்கும் தொந்தரவைக் கண்டித்தும் தமிழ்நாட்டுடைய வரலாற்றை உண்மையான வரலாற்றை வெளியிட மறுக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராகவும் பிரதமர் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதியைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை தொகையை அளிக்காமல் இருப்பதற்கும் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில் கருப்புக்கொடி காட்டுவார்கள்” எனப் பேசினார்.