திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கும் வகித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், திமுக அரசின் பொருளாதார கொள்கையை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்திருப்பது தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் நிலுவையில் உள்ளது. 2010 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின்  கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது, ​​உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் வட்டிச் சுமை (%) 3வது அதிகமாக உள்ளது. கோவிட்க்கு முந்தைய அளவை விட தமிழ்நாட்டின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணையவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசினார். இது பெரும் சர்ச்சையானது. அப்போது திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த சூழலில், திமுக அரசின் பொருளாதார கொள்கை மீது காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் செய்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “பிரவீன் சக்கரவர்த்தி பேசியது எல்லாம் காங்கிரஸின் குரல் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் பேசலாம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசலாம் அல்லது ராகுல் காந்தி பேசலாம். இவர் ஏன் இப்படி தொடர்ந்து பேசுகிறார் என்று தெரியவில்லை. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர் இப்படி பேசுகிறார். 140 ஆண்டுகளை கடந்த காங்கிரஸ், ஒருபோதும் கொள்ளைபுறம் வழியாகவோ, பின்புற வழியாகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாது. இது தனி நபருடைய வளர்ச்சிக்காக, விளம்பரத்திற்காக இந்த முயற்சியை முன்னெடுக்கிறார்கள். இதற்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை. எப்போதும் எங்களுடைய அகில இந்திய தலைமை தான் கூட்டணியைப் பற்றி முடிவு செய்யும்.
 
காங்கிரஸ் பெயரை சீர்குலைக்கலாமா? ராகுல் காந்தி பெயரை கெடுக்கலாமா என்று முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் கை கொடுக்காது. என்னைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பலமாக இருக்கிறது. இதை யாரும் பிரிக்க முடியாது. பா.ஜ.கவை தமிழ்நாட்டில் காலூன்ற அனுமதிக்கும் சில சக்திகள் மறைமுகமாக வேலை செய்கின்றன. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்தோடு ஒப்பிடுவதா?. உத்தரப் பிரதேசம் புல்டோசர் ஆட்சி. ஏழை எளிய மக்களை புல்டோசர் வைத்து இடிப்பது யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி. அப்படியென்றால் அவர் யோகி ஆதித்யநாத்தின் குரலாக பேசுகிறாரா? பிரவீன் சக்கரவர்த்தி சொல்லிய உத்தரப் பிரதேசத்தின் புள்ளி விவரங்கள் தவறு. உத்தரப் பிரதேசத்தை தூக்கிப் பிடிப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?. காங்கிரஸ்காரர்கள் ஒருபோதும் பா.ஜ.கவையோ அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸையோ தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. அதை சரி என்கிறார் என்றால் அவர் எப்படி காங்கிரஸ்காரராக இருக்க முடியும்?. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து அகில காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன்” என்று கூறினார். 

Advertisment