‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நீலகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் குன்னூரில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து நேற்று (24-09-25) இரண்டாம் நாளாக கூடலூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிப் பேசுகையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதாவது அவர் பேசியதாவதும், “செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். அவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்துவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கோரிக்கை வைக்கிறார். ஆனால், ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை நீங்கள் கேட்காதீர்கள் என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்திருந்தாலோ, ஆரம்ப காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு உழைத்துக் கொண்டிருந்தாலோ அந்த எண்ணம் அவருக்கு வந்திருக்குமா? அவருக்கு திமுகவை தாங்கி பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவர் விஸ்வாசமாக இல்லை, ஆனால் திமுகவுக்கு விஸ்வாசமாக இருக்கிறார். சட்டமன்றத்திலும் அவர் விஸ்வாசமாக பேசுகிறார், சட்டமன்றத்திற்கு வெளியிலும் அவர் விஸ்வாசமாக பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பிவிட்டார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பிளவு வருவதை இப்போது ஆரம்பமாகிவிட்டது” என்று பேசினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “அவர்களுடைய கூட்டணியில் இருந்து வெளியே போய்கொண்டிருக்கிறார்கள். ஏன் எங்கள் கூட்டணி பற்றியும் காங்கிரஸ் பற்றியும் அவருக்கு அவ்வளவு கவலை?. அதிமுக மீது எடப்பாடி பழனிசாமி விஸ்வாசமாக இருக்கிறாரா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி பா.ஜ.கவினர் விமர்சனம் செய்தனர். ஜெயலலிதாவை சிறைத் தண்டனை பெற்றவர், ஊழல்வாதி என்றெல்லாம் பேசினர். அந்த கட்சியுடன் அவர் கூட்டணி வைக்கலாமா? முதலில் அவர் அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருக்கட்டும். எங்கள் கட்சியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை. நாங்கள் ஒன்றும் நாற்காலிக்குள் உள்ளேயும் டேபிளுக்குள்ளேயும் தவழ்ந்து போய் பதவிக்கு வரவில்லை. எங்களை அங்கீகரித்து எங்கள் பணி மீது நம்பிக்கை வைத்து தலைமை ஒரு பொறுப்பை கொடுக்கிறார்கள். எப்படி கட்சியை நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்று காட்டமாகப் பதிலளித்தார்.