SelvaPerunthagai puts an end to the controversy about India alliance
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன் தினம் திடீரென டெல்லி சென்றார். இதனையடுத்து, திமுக - காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்வப்பெருந்தகை, “இரண்டு மூன்று மாதமாக ஒரு மிகப்பெரிய சலசலப்பு. இந்த கூட்டணி என்ன ஆகப் போகுது? எந்த திசையில் போகப்போகுது? என நிறைய பேர் குளிர் காய நினைத்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் இன்னும் ஓரிரு மணித்துளிகளில் ஒரு அறிவிப்பு வரும். எந்த காலத்திலும் இந்தியா கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது” என்று கூறினார்.
Follow Us