பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அந்த கூட்டணி சார்பில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

இந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியை கலைச்சிட்டு போயிருங்க. அது, தேவையே இல்லை. அது நாட்டுக்கும் ஆகாது, ஊருக்கும் ஆகாது.  இன்றைக்கு இருக்கிற காங்கிரஸ், காந்தி ஆரம்பித்த  காங்கிரஸ் கிடையாது. நேரு ஆரம்பித்து,  உழைத்த காங்கிரஸ் கிடையாது. நேதாஜி இருந்த  காங்கிரஸ் கிடையாது. இன்றைக்கு இருக்கின்ற  காங்கிரஸ், காட்டி கொடுக்கின்ற காங்கிரஸ்.  நாட்டை காட்டி கொடுக்கின்ற காங்கிரஸ்.   தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற காங்கிரஸ்.  தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிற காங்கிரஸ். நாட்டில் என்ன என்னமோ நடக்குது,  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். நாட்டை பற்றிய கவலை எல்லாம்  காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடையாது.  திமுக தான், வீணாப் போன அந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி பிடிச்சிட்டு  இருக்கிறது. தொப்புன்னு போட்டுருங்க , எந்திரிக்கவே முடியாது அவர்களால்” என்று கூறினார்.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் விமர்சனத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி என்ன  சாதாரண தலைவரா? அவருடைய பாரம்பரியம்  தெரியுமா? வரலாறு தெரியுமா? என்ன ஜீன் தெரியுமா?.  இந்த தேச  விடுதலைக்காக  10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த  கொள்ளுபேரன் . இந்த மண்ணுக்காக  உயிரை கொடுத்தவருடைய  பேரன்,  இந்த தேசத்திற்காக தியாகம் செய்து  தன்னுயிரை  தமிழ்நாட்டில்  எடுத்த மகன் அவர்.  ராஜேந்திர பாலாஜிக்கு என்ன அருகதை இருக்கிறது?. எடப்பாடி பழனிசாமி இதையெல்லாம் அடக்கி வைக்க வேண்டும். எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேச கூடாது. எங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நாங்கள் நாகரீகமாக இருக்கிறோம், யாரையும் புண்படுத்தக்கூடாது, அநாகரிகமாக பேசக் கூடாது என்று இருக்கிறோம்.  

Advertisment

சிறுபான்மையினரை ஆதரித்தால் பயங்கரவாத கட்சியா? ஒருவர் தவறு செய்தால் அது எப்படி ஒட்டுமொத்த சமூகத்தின் மீது தவறாகும்?. அதிமுகவுக்கு என்ன வரலாறு இருக்கிறது. அதிமுக ஆரம்பித்து 53 வருடத்தில் எத்தனை தோல்விகளை சந்தித்தார்கள். காங்கிரஸ் ஆரம்பித்து, 140 வருடம் ஆகிறது. இன்றைக்கு இந்தியாவில் எந்த பதவிக்கும், பவுஸ்களுக்கும் ஆசைப்படாத பேரியக்கம் காங்கிரஸ் தான். மக்களுக்கான இயக்கம் தான். நாங்களால் வீட்டில் இருப்பவர்களை தான் டாடி என்று கூப்பிடுவோம். அந்த பண்பு கூட இல்லாத அவர், காங்கிரஸ் பற்றியும் ராகுல் காந்தியை பற்றி பேசுகிறார் என்றால் அவரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு நாவடக்கம் வேண்டும். நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். குறைந்தபட்சம் அவருக்கு தலைமை பண்பு வேண்டும். இப்படி போன்றவர்கள் தான் மாவட்டச் செயலாளராக, அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்  பேசியதை திரும்ப பெற வேண்டும்.  இல்லையென்றால் நாங்கள் போராட்டம் அறிவிப்போம்” என்று கூறினார்.