மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று (24-09-25) இரண்டாம் நாளாக கூடலூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிப் பேசுகையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதாவது அவர் பேசியதாவது, “செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். பிச்சைக்காரர்கள் ஒட்டுபோட்ட சட்டை போட்டிருப்பதை போல் அவர் பல கட்சிக்கு போய்விட்டு வந்திருக்கிறார். எந்தெந்த கட்சிக்கு செல்கிறாரோ அந்த கட்சியின் கொள்கையை கடைபிடிப்பது தான் செல்வப்பெருந்தகையின் வேலை. காங்கிரஸ் கட்சியை அவர் வளர்க்க பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கோரிக்கை வைக்கிறார். ஆனால், ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை நீங்கள் கேட்காதீர்கள் என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்திருந்தாலோ, ஆரம்ப காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு உழைத்துக் கொண்டிருந்தாலோ அந்த எண்ணம் அவருக்கு வந்திருக்குமா? அவருக்கு திமுகவை தாங்கி பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவர் விஸ்வாசமாக இல்லை, ஆனால் திமுகவுக்கு விஸ்வாசமாக இருக்கிறார். சட்டமன்றத்திலும் அவர் விஸ்வாசமாக பேசுகிறார், வெளியிலும் விஸ்வாசமாக பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களும் காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பிவிட்டார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பிளவு வருவதை இப்போது ஆரம்பமாகிவிட்டது” என்று பேசினார்.
பிச்சைக்காரர்களோடு செல்வப்பெருந்தகையை எடப்பாடி பழனிசாமி ஒப்பிட்டு பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.
டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்? என்னை ‘பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை’ என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன. விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?” எனக் குறிப்பிட்டுள்ளார்.