பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அந்த கூட்டணி சார்பில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

இந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் படுதோல்வியால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பலவீனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இது தொடர்பாக தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “வதந்திகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அந்த மாதிரி சந்திப்புகள், அறிவிப்புகள் இருந்தால் கண்டிப்பாகப் பொதுவெளியில் கூறப்படும். எனவே வதந்திகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம். கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. மக்களிடம் எங்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது” என்று கூறினார்.

இந்த நிலையில், தவெக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “நீங்கள் சொல்லிதான் கேள்விப்படுகிறோம். எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்களுடைய காங்கிரஸ் தலைமை, நீங்கள் போய் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. திமுகவுடன் இந்தியா கூட்டணியுடனும், ரொம்ப வலிமையாகவும் உறுதியாகவும் நாங்கள் இருக்கோம். எந்த காலத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சில பேர் ஊகிக்கிறார்கள். இதை எங்கள் ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கே தான் சொல்ல வேண்டும். ரோட்டுல போறவங்க வரவங்க எல்லாம் சொல்றாங்க என்று பத்திரிகையில் செய்தியாக போடுகிறீர்களே இது எந்தவிதத்தில் நியாயம்?” என்று கூறினார். 

Advertisment