தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கு இன்று (10.12.2025) முதல் விருப்ப மனு தரலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை இன்று (10.12.2025) முதல் வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த (https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh?usp=sharing) லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us