மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நேற்று முன் தினம் (26.01.2026) திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸ் எம்.பிக்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரைத் தான் சொல்கிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெற்றலாம் தலைமை புரிந்து கொண்டு அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணியை நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என மறைமுகமாக திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, கோ.தளபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கக்கூடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக மட்டுமே அமைதியாகவும் அனுசரித்துப் போவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுக நிர்வாகி கோ.தளபதியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதியின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.
காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது, 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது. கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதியின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/thalase-2026-01-27-07-25-00.jpg)