Sellur Raju warns Tvk leader Vijay
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தில் விஜய் மேற்கொண்ட இந்த பரப்புரையில், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய் பேசிய போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர், “அரசியல் எதிரி என்பதும் கொள்கை எதிரி யார் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே எனக்கு போதும். அதனால் அவர்களை மட்டுமே எதிர்ப்போம். அதுவும் யார் இங்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே எதிர்ப்போம். சும்மா களத்திலே இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை. நீங்கள் கேட்டுட்டு இருக்கிற காரணத்திலாயே எதிர்க்க முடியாது. திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” என்று பேசினார். விஜய் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் நாவை அடக்கிப் பேச வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை கீழமாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ, “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வடிவேலுவையும், நயன்தாராவையும் கூட்டிட்டு போய் பிரச்சாரம் செய்யுங்கள். இவரை காட்டிலும் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூட தான் செய்யும்.
நாங்கள் களத்தில் இல்லை என்று சொல்வது முட்டாள்தனத்திலும் முட்டாள்தனம். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கூட்டம் கூடியது. அவருக்கு முக கவர்ச்சி இருக்கிறதா? அடுக்குமொழியில் பேசுகிறாரா? இல்லை, இந்த ஆட்சி அவலங்களை எடுத்து சொல்கிறார். அதை மக்கள் கேட்கிறார்கள். பலதரப்பட்ட மக்களும் அந்த கூட்டத்திற்கு வருகிறார்கள். அதுமாதிரி விஜய் நடத்துகிற கூட்டங்களில் வருகிறதா? எங்க கட்சி களத்தில் இல்லை சொல்கிற அளவுக்கு அவருக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? அவர் நாவை அடக்கி பேச வேண்டும்” என்று பேசினார்.
Follow Us