அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலக மக்களுக்கும், ஊடகத்தினருக்கும் முதற்கண் வணக்கம். இன்றைக்கு உலகமே ஆளுகின்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று குடும்பத்தாரோடும், கட்சியின் குடும்பத்தாரோடும் சென்று மாண்புமிகு முதலமைச்சர் மீண்டும் தமிழகத்துடைய முதலமைச்சராக வரவேண்டும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பொழிய வேண்டும். காரணம் என்னவென்றால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தையில் இருந்து பாட்டி வரைக்கும் பாதுகாப்பு வேண்டும். இந்த நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி. அனைவருக்கும் சமமான ஆட்சி. உண்மையான ஆட்சி. உண்மையான தமிழகத்திற்கு விடியலை எடப்பாடி பழனிசாமி கொடுப்பார். அதற்குச் சான்று கொரோனா காலத்தில் அவர் பணியாற்றிய விதம் அரசு அதிகாரிகளை, அமைச்சர்களைக் கையாண்ட விதம் அதுமட்டுமல்லாமல் இடர்பாடு காலங்களில் தமிழகத்திலே புயல் வறட்சி என எது வந்தாலும் மக்களுக்குத் துணையாக இருந்து ஒரு சாமானியனாக நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தில் பிறந்து ஏழை எளிய மக்களுடைய கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்ததனால் நல்லாட்சியை 4 ஆண்டுகள் மூன்று மாதம் கொடுத்தார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கொடுத்ததை போல் மக்களுக்கான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். நாட்டில் விலைவாசி ஏற்றம் இல்லை என்று நாடே பாராட்டியது. தனக்குத் தானே பாராட்டு விழா நடத்துவது கிடையாது. தனக்குத் தானே என்னுடைய ஆட்சிதான் சிறந்த ஆட்சி இந்தியாவிலே முதன்மையான ஆட்சி என்று அவர் எந்த நேரத்திலும் சொன்னதில்லை. பாரத பிரதமர் சொல்லியிருக்கிறார். உலகத்தில் இருக்கிற ஊடகங்கள் சொல்லியிருக்கிறது. இந்த கொரோனா தொற்றை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஒழித்திருக்கிறார் என்று சுகாதார மையம் (WHO - உலக சுகாதார நிறுவனம்) கூறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Follow Us