Sellur Raju said DMK is conspiring to tarnish Vijay's image
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற சினிமா தயாரிப்பாளரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவில் தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த திருமண விழாவிற்கு விஜய்யும், திரிஷாவும் ஒரே காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் சொந்த கட்சி தொண்டர்களே விஜய்யை இந்த விவகாரத்தில் எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜுவிடம், விஜய்யின் விவாகரத்து வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுக எப்படியாவது தில்லுமுல்லு செய்து மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அன்பு சகோதரர் தவெக தலைவருடைய இமேஜை குறைக்கணும் என்ற அடிப்படையில் இதெல்லாம் பரப்பி வருகிறார்கள். எப்படி அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டுமென்பதற்காக இங்கு இருந்து சென்ற எடுபிடிகள், எங்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைவதாக விழா நடத்துகிறார்கள். அந்த இணைப்பு விழாவில் அதிமுகவின் உண்மையான தொண்டன் போக மாட்டான். அது எல்லாமே காசு கொடுத்து கூட்டப்படுகிற கூட்டம். நிச்சயமாக அதிமுக தொண்டர்களும் இந்த இயக்கத்துக்காக பாடுபட்ட அத்தனை பேருமே இங்கே வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
Follow Us