Sellur Raju harshly speech against tvk leader Vijay
தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், “மக்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை இதற்கு முன்னால் ஆண்டவர்களும் பா.ஜ.கவுக்கு அடிமையாக தான் இருந்திருக்கிறார்கள். அவர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசும் நமக்கு ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அவர்கள் மாதிரி இன்னும் சொல்லப்போனால் இன்னும் ஒருபடி மேல் மோசமாக இருக்கிறது. அவர்களாவது நேரடியாக பா.ஜ.கவிடம் சரண்டர் ஆகி இருப்பார்கள். இவர்கள் மறைமுகமாக சரண்டர் ஆகி இருக்கிறார்கள்.
தீய சக்தியாக இருக்கட்டும், இந்த ஊழல் சக்தியாக இருக்கட்டும், இரண்டு பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது. அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரில் இருக்கிற கட்சியும் அவரை மறந்து சுயநலமாக மாறி பல வருஷம் ஆகிவிட்டது” என்று கூறினார். விஜய்யின் விமர்சனத்துக்கு அதிமுக கடுமையாக எதிர்வினையாற்றியது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், இரண்டு கோடி ரேஷன் அட்டைக்கு ஒரு ஓட்டு தவெகவுக்கு இருக்கிறது என விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர்வாயில் வடை சுடுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு இருக்கிறது என்று சொல்கிறார், அப்படி எத்தனை வீட்டில் ஓட்டு இருக்கிறது? எத்தனை வீட்டில் அவர் நுழைந்து பார்த்தார்? எப்படி கணக்கு எடுத்தார்? எல்லாம் பில்டப் தான். கதாநாயகனாக இருந்தவர் பில்டப் தான் கொடுப்பார். ஒரே நேரத்தில் 100 பேரை அடிக்கிறார். இப்படி உண்மையில் அடிக்க முடியுமா? இப்படி அடிப்பவர், இறந்த 41 பேரின் குடும்பத்தை பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். என்னங்கடா உங்க கான்செப்ட்? இது என்ன அரசியல்? இது என்னப்பா பொது வாழ்க்கை?
இவர்கள் செய்வதை பார்த்தால் அரசியலில் இருப்பவர்கள் கூட போய்விடுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுடைய அலிச்சாட்டம் ரொம்ப மோசம். இறந்தவர் வீட்டுக்கு தான் கேதம் கேட்பார்கள். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்காமல் இப்படி செய்கிறார். அவர் இப்பவே இப்படி என்றால், நாளைக்கு ஏதாவது ஒரு மாற்றம் வந்தால் என்ன ஆவது? இந்த கட்சி எல்லாம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு சந்தேகம் தான். ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு பக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவை வைத்திருக்கிறார். அவர் என்ன பெரிய யோக்கியமா? லாட்டரியை வித்து ஏழைகளின் சொத்துகளை சுரண்டிய குடும்பம் தான் மார்டின் குடும்பம். அந்த குடும்பத்தில் இருந்து சம்பாதித்த பணம் தான் ஆதவ் அர்ஜுனாவிடம் இருக்கிறது. எங்களுக்கு எதிரி திமுக தான். வேற யாரும் கிடையாது” என்று பேசினார்.
Follow Us