தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எத்தனை பேர் தாங்க எம்.ஜி.ஆர்.... எம்.ஜிஆர்னு சொல்கிறது. ஒரு எம்ஜிஆர் தான் என்று நாங்கள் சொல்கிறோம். அவர் உருவாக்கின இயக்கம் இரண்டரை கோடி தொண்டர்களைப் பெற்ற ஒரு மாபெரும் இயக்கமாக இந்தியாவிலே மாபெரும் ஏழாவது இயக்கமாகத் தமிழகத்திலே மிகப்பெரிய இயக்கமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது.
இன்றைக்கு எம்.ஜி.ஆரின் கட்சி இருக்கும்போது, நான்தான் அவர் வாரிசு என்று அரசியலுக்கு வருகிற புதுமுகங்கள் எல்லாரும் தான் சொல்கிறார்கள். விசால் சொன்னார், டி ராஜேந்திரன் சொன்னார் பாக்கியராஜு சொன்னார், சுவாஜி கணேசனே சொன்னார் எம்ஜிஆரை எல்லாரும் கொண்டாடலாம். மறைந்த கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர். என்று அவரே சொன்னார். நான் புரட்சித் தலைவருடைய ரசிகன், புரட்சித் தலைவரைப் பின்பற்றி நான் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறேன் என்று கூடச் சொன்னார். ஆனால் மக்கள் ஏற்றுக்கொண்டது ஒன்றே ஒன்னுதான் அவர் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
திடீர் சாம்பார், திடீர் பாஸ்ட் புட் மாதிரி விஜய் எடுத்த உடனே இன்றைக்கு ஸ்ட்ரைட்டா நான் கோட்டைக்குத் தான் செல்வேன் என்கிறார். காதல் படத்தில் பாத்தீங்கன்னா சொல்லுவார்கள் எப்பா தம்பி என்று ஒரு நடிகரைப் பார்த்து கேட்பார்கள். படத்தில் நடிக்க வந்திருக்கிறேனென்று சொல்லுவான். என்ன மாதிரி கதை வசனம்?. என்ன மாதிரி உனக்கு வேசம் வேண்டும் என்று கேட்பார். சிரிப்பு நடிகரா? என்று கேட்பார் இப்படி கேட்டுட்டே வரும் போது நோ நோ என்று சொல்வர். வில்லனா? என்று கேட்டதற்று. நோ...ஸ்ட்ரைட்டா கதாநாயகன் தான் என்று சொல்லுவார். அது மாதிரி விஜய் கதாநாயகனாக இருக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. விஜய்யை எம்ஜிஆர் உடன் ஒப்பிடுவதே தவறு. பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாரிடம் பாடம் படித்தவர். எம்ஜிஆர் அண்ணாவிடம் பாடம் படித்தவர்.அந்த இயக்கத்தினுடைய வளர்ச்சிக்காக பன்னெடுங்காலம் பாடுபட்டவர். அதன் படி அவர் படிப்படியாக வந்தார். ஆனால் விஜய் அப்படி இல்லாமல் ஸ்ட்ரைட்டா வரனும் என்கிறார். இவர் எதுவுமே இல்லாமல் யாருடைய துணையும் இல்லாமல் நான் ஸ்ட்ரைட்டா ஆட்சிக்கு வந்துவிடுவேன் அப்படியென்று சொல்கிறார். அது எனவே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” எனப் பேசினார்.