“எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடல்நகர் 2-ஆவது வார்டில், கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது புதிய விஷயமல்ல” என்று கூறினார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் பனையூரில் இருந்தபடி அரசியல் செய்வது விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளது. அவர் களத்தில் இறங்கி மக்களைச் சந்திக்க வேண்டும். புகழை மட்டும் வைத்து வெற்றி பெறலாம் என நினைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள். வெளியில் வருவது இடையூறு எனத் திரும்பத் திரும்பக் கூறுவது ஏற்புடையதல்ல. எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர். மட்டுமே” என்றார்.