Advertisment

“மாணிக்கம் தாகூரின் பேச்சு வேட்டுவைத்து விடும்” - தற்சார்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை!

pon

Self-Help Farmers Association Coordinator warns Manickam Tagoor

தமிழக தற்சார்பு விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சேர்ந்த பொன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணிக்கம்தாகூருக்கு ஜனநாயக சிந்தனையாளர்களின் சில கவனப்படுத்தல்கள்..  உங்களது குரல் நாக்பூர் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் இருப்பதாகவே நாங்கள் சந்தேகப்படுகின்றோம். மாணிக்கம் தாகூர் அவர்களே! திமுக செய்த பாவத்திற்கு நாங்கள் சம்பளம் கொடுக்க வேண்டுமா என்று கேட்கின்றீர்கள். வரலாற்று வழியில் தமிழர்கள் முதலில் மாநில உரிமை தேசிய இனங்களின் இறையாண்மை பற்றிய கோட்பாட்டில் இந்தியாவிலேயே வழிகாட்டியாக இருப்பவர்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா?

Advertisment

தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தையும் திராவிட நாடு கோரிக்கையையும் தமிழ்நாட்டில் உரக்க முழங்கிய கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அறிவீர்களா? இராஜமன்னார் குழுவை அமைத்து மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு. அனந்தபூர்சாகிப் தீர்மானம் அதை ஒட்டி பஞ்சாபில் வந்தது. காஷ்மீர் விடுதலை முழக்கம் இதன் தொடர்ச்சியாய் எழுந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த கட்சியாக தமிழ்நாட்டில் நீதிக் கட்சி வெள்ளையர் ஆட்சியின் கீழ் அரசில் பங்கு பெற்று சமூக நீதிப் பாதையை அன்றைக்கு அமைக்க தொடங்கியது. இன்றைக்கு ராகுல் காந்தி அழகாகவும், தெளிவாகவும் முன் வைக்கிற சமூகநீதி கருத்துக்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் வித்திட்டது நீதிக்கட்சி தான். அதை வளர்த்தெடுத்து சமூக சக்தியாக மாற்றி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கியது திராவிட இயக்கத்தின் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் என்பதை தாங்கள் அறிவீர்களா?

Advertisment

தமிழ்நாட்டிற்கு என்று காங்கிரஸ் கட்சி செய்த நன்மைகள் எதுவுமே இல்லையா என்றால் ஒப்பிட்ட அளவில் பல நன்மைகள் நடந்தேறி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் பலம் பெரும் பண்ணையார்களை கட்சியில் சுமந்து கொண்டு சாமானிய உழவர்களையும் ஏழை கூலி உழவர்களையும் கிராமப்புறங்களில் அடக்கி ஆண்டு கொண்டு இருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தான். கிழக்கு மாவட்டத்திலும் வத்திராயிருப்பு போன்ற பல்வேறு பகுதிகளிலும் பண்ணையார்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்பதை உறுதி செய்தார்கள். கீழ்வெண்மணி படுகொலையை சந்தித்தார்கள் போராடினார்கள். பழைய கோட்டை பட்டக்காரர், மூப்பனார் ,பூண்டி வாண்டையார் போன்ற பழம் பெரும் பண்ணையார்களையும் பெரும் முதலாளிகளையும் எதிர்த்து சாமானிய மக்களின் இயக்கமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் தலைமை அளித்து தாழ்த்தப்பட்ட மக்களை தன்னோடு இணைத்துக்கொண்டு வளர்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

திமுக கொண்டு வந்த பல்வேறு நிலைச் சீர்திருத்த நடவடிக்கைகளால் நிலவுருவத்துவத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது என்று ஆய்வாளர் ஜெயரஞ்சன் மிகச் சிறந்த ஆய் உரையை நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக மாணிக்கம் தாகூர், நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார். அது நாடக உண்ணாவிரதம் அல்ல, உயிர்துறந்த உண்ணாவிரதம்! அன்றைக்கு இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் மனிதருள் மாணிக்கம் என்று போற்றப்படுகின்ற ஜவர்ஹலால் நேரு, தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர் அதே விருதுநகரைச் சார்ந்த காமராஜர்.

சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் அமர்ந்திருந்த இடம் காமராஜரின் விருதுநகர் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. தனது கட்சிக்காரர் தனது சொந்த ஊர்க்காரர் ஒரு நியாயமான கோரிக்கைக்கு உண்ணாவிரதம் இருந்ததைக் கூட நேருவும், காமராஜரும் காங்கிரஸ் கட்சியும் பொருட்படுத்தாமல் தனது கட்சிக்காரனையே சாகவிட்ட வரலாறு கறைபடிந்த வரலாறு அல்லவா? சங்கரலிங்கனாரை சாக விட்டதற்காக இதுவரை காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுண்டா? மனம் நொந்து போன சங்கரலிங்கனார் சாகும் தருவாயில் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்து இறுதி நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டு வரலாற்றில் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு திமுக செய்த பாவத்திற்கு பழியை நாங்கள் சுமக்கிறோம் என்று நீங்கள் பசப்பலாமா? தமிழ்நாட்டில் யாரும் வரலாறு தெரியாதவர்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாத ஆணவம் இல்லையா இது. மொழிப்போர் மாணவர் தலைவர் மாணவர் சீனிவாசன் உங்கள் ஊர் விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவே கொலு வீற்றிருந்த காமராஜர் தோற்கடித்த வரலாறும் நடந்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணித்து ஒரு மாபெரும் போரையே தமிழ் மக்கள் மீது நடத்தியது காங்கிரஸ் கட்சியின் டெல்லி அரசும், தமிழ்நாட்டில் இருந்த காங்கிரஸ் அரசும் தான் என்பதை அனைவரும் அறிவோம்.

அவசர நிலைப் பிரகடனத்தை செய்து இந்திய நாட்டையே சிறைக்கூடம் ஆக்கியது இந்திராவின் காங்கிரஸ் அரசு தானே. உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாத நிலையை காங்கிரஸ் அடைந்தது நினைவில்லையா? எண்ணற்றோரை சிறையில் அடித்துக் கொன்றார்கள்... தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது, இராணுவம் தமிழ்நாட்டில் நிலைக்கொண்டது. திமுகவினரும் ஜனநாயக சக்திகளும் சிறையிலே பூட்டப்பட்டார்கள். இந்த வேதனையில் பெருந்தலைவர் காமராஜர் செத்தே போனார். நெருக்கடி நிலையில் கொடுமைகளுக்காக இந்திரா காந்தி பகிரங்கமாக சென்னை மெரினா கடற்கரையில் மன்னிப்புக் கேட்டார். 1980 ஆம் ஆண்டு கலைஞர் ‘மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று உங்களை அழைத்து வந்தார். மீண்டும் சோனியா காந்தி காலத்திலே 2004 ல் கூட்டணி அமைத்து பத்தாண்டு காலம் திமுக கட்சியின் தயவிலேயே தான் அது போன்ற மாநில கட்சிகளின் தயவிலேயே தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. தான் அமைச்சரவையில் பதவி வகித்த காலத்திலேயே ஆ. இராசா அபாண்டமான பழி சுமத்தப்பட்டு சிறைச்சாலைக்கும் சென்றார். தானே வாதாடி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போட்ட வழக்கு தவறு என்று மெய்ப்பித்து விட்டு வெளியே வந்தார். கனிமொழியும் செய்யாத தவறுக்காக திகார் சிறையிலே வாடினார். இது மட்டும் அல்ல தமிழினத்தின் ஊனோடும் உயிரோடும் கலந்த ஈழப் பிரச்சனையில் அமைதிப்படையை அனுப்பி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை தமிழீழத்திலே கொன்று குவித்தது யாருடைய ஆட்சி? இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வி.பி.சிங் காலத்தில் திரும்பி வரும் பொழுது நான் வரவேற்க மாட்டேன் என்று நிமிர்ந்து சொன்னார் கலைஞர். தடா சட்டத்தையும், பொடா சட்டத்தையும் கொண்டு வந்தது யார்?

எனவே நீங்கள் செய்த அத்தனை கொடுமைகளையும் இன்றைக்கு கடந்து திமுக கூட்டணியை இந்திய கூட்டணியை ஜனநாயக சக்திகள் ஆதரிப்பதற்கு ஒரே காரணம் இந்திய நாட்டில் சனாதன சக்திகளை அதிகாரத்தை கைப்பற்றி இந்த நாட்டை பிற்போக்குதனத்திலே தள்ளி வருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அயோத்தி ராமர் கோயில் பிரச்சனை நடைபெற்ற பொழுது டெல்லியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி.., இராமர் கோயில் பிரச்சனை வளர்வதற்கு துணை போனதும் காங்கிரசில் இருந்த சனாதன சக்திகள் தான். எனவே மாணிக்கம் தாகூர் அவர்களே, வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இருப்பை தமிழ்நாட்டில் முற்றாகத் துடைத்துக் கொள்ளும் என எச்சரிக்க விரும்புகிறோம். நீங்கள் திட்டமிட்டு நாக்பூர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்குத் தான் வேலை செய்கின்றீர்கள் என்று எங்களைப் போன்றவர்கள் சந்தேகப்படுகின்றோம். ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் இந்திய கூட்டணியின் துணையோடு இயங்குவதற்கும் உங்கள் பேச்சு வேட்டுவைத்து விடும். எனவே உங்களை ராகுல் காந்தி கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை பெரும் கவலைக்கிடமாகிவிடும்.... மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கின்றோம்” என கூறியுள்ளார்.

Manickam Tagore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe