Sekar Babu's explanation on the controversy surrounding the Suchindram chariot festival
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாமலையர் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று (02-01-26) நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவின் போது அங்கிருந்த இந்து அமைப்பினர் சிலர் அமைச்சர்கள் முன்பு, ‘பாரத் மாதா கீ ஜே’ என்று முழக்கமிட்டனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு அவர்களை கண்டித்த போது கேட்காமல் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சேகர்பாபு, அவர்களை கோபத்தோடு திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சேகர்பாபு பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேற்று விளக்கமளித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தில் நடந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. இந்த ஆட்சியை பொறுத்த அளவில் அராஜகத்துக்கோ அத்துமீறல்களுக்கோ அடங்குகின்ற ஆட்சி இந்த ஆட்சி இல்லை. எங்கள் முதல்வர் ஏற்கெனவே இளைஞர் மாநாட்டில் பேசியது போல் அன்பாக வந்தால் அரவணைப்போம், அதிகார திமிரோடு வந்தால் நிச்சயமாக முட்டி மோதி பார்த்துவிடுவோம். இன்று காலையில் இறை வழிபாட்டிற்காக சென்றிருக்கின்ற நிகழ்வு, அதுவும் திருக்கோயிலேயே தேரோட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற தேரோட்டம்.
அந்த தேரோட்டத்திற்கு சென்றிருந்த போது சிலர் விரும்பத்தகாத கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லியதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அது திருகோவிலில் இல்லாமல் வெளியிடத்தில் சொன்னால் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தளவில் தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க இது தான் எங்களுடைய கொள்கை. அதுமட்டுமல்லாமல் சார்வார்க்கருடைய பெயரைச் சொல்லி அவர் வாழ்க என்று கோஷமிடுகின்றார்கள். இது எப்படி ஏற்புடையது? ஆன்மீகமும் அதன் அடிப்படையான பக்தியும் எதை உணர்த்துகிறது என்றால் அறத்தை தான் உணர்த்துகின்றது. அராஜகத்தை உணர்த்துவதில்லை. நாம் இந்துக்களிலே எடுத்துக்கொண்டால், ஓம் ஓம் என்று நாம் சொல்வதனுடைய பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்றால் அமைதி, ஒழுக்கம், இறையன்பு. அது போல் இஸ்லாமியத்தில் வரும் சொல்லின் பொருள் அமைதி, ஒழுக்கம் இவை தான். ஆமேன் என்பது அமைதி, ஒழுக்கம் என்று தான் கிறிஸ்துவத்தில் வரும். இவைகளைத் தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அமைதி காக்கின்ற இடத்தில் மனித நேயத்தை வளர்க்க வேண்டும். மத வெறியை வளர்க்கக் கூடாது.
நாங்கள் தொடர்ந்து சொல்வது கலைகளை வளருங்கள், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம். கலவரத்தை வளர்க்காதீர்கள். நிச்சயம் தமிழகத்தில் அந்த கலவரத்துக்கு இடமில்லை. காலையில் நடந்த நிகழ்வு இது தான். நடுநிலையாளர்கள், பொதுமக்கள் அங்கு கூடி நின்ற அந்த 10, 20 பேரை தவிர்த்து அனைவரும் அவர்களை பார்த்து தான் முகம் சுலித்தார்கள். மீடியா பலம் இருப்பதால் அங்கொன்றும் இங்கொன்றும் கட் செய்து எடிட் செய்து வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவத்தை நீங்களே விசாரித்து உங்கள் மனசாட்சிக்கு ஏற்றார் போல் நீங்கள் பதிவிடுங்கள்” என்று கூறினார்.
Follow Us