விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அதிமுக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வருமா என்று எடப்பாடியிடம் கேட்ட போது இன்னும் 8 மாதம் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள், நிச்சயம் வருவார்கள் என்று சொல்லி இருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், “அதே தான் நான் சொல்றேன். இன்னும் எட்டு மாதம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். பா.ஜ.கவை உள்ளே வரவிடாமல் வீழ்த்த வேண்டும் என்று திமுக சொல்கிறது. அது ஒரு அணியாக இருக்கிறது. திமுக மறுபடியும் வரக்கூடாது அதை வீழ்த்த வேண்டும் என்று இன்னொரு அணி சொல்கிறது. அவர்கள் எல்லோரும் ஓரணியில் இருக்கிறார்கள். நாங்கள் மட்டும் தான் ஒரே அணியில் இருக்கிறோம். தீமைக்கு மாற்று தீமை இல்லை. இங்கு மாறி மாறி ஆண்ட் ஆட்சியாளர்கள் இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகிறார்கள்?. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான தேவைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்றி இருந்தால் அந்த கட்சிகள் இந்த நிலத்துக்கு வர வேண்டிய அவசியம் ஏன் உருவாகுகிறது?.
இந்திய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஏன் தேவை?. காங்கிரஸோ அல்லது பா.ஜ.கவோ தமிழ்நாட்டுக்கு ஏன் தேவை?. முதல் முறையாக இந்தியை திணித்தது யார்? கல்வி மாநில உரிமையை எடுத்துக்கொண்டு போனது யார்?. அதை எடுத்து போகும்போது இங்கு அதிகாரத்தில் இருந்தது யார்?. மருத்துவத்தை பொதுப்பட்டியல் சேர்த்தது யார்? நீட் தேர்வை திணித்தது யார்? அதை எதிர்க்காமல் கையெழுத்து போட்டு வரவேற்றது யார்? பரந்தூர் விமான நிலையத்துக்கு முதன் முதலாக இடத்தை கொடுத்தது யார்? திமுக தான். இவர்கள் பா.ஜ.கவை எதிர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். இந்த கட்சிகளின் கொள்கையில் எதில் மாற்றம் கண்டுபிடித்தீர்கள்?. ஜெயலலிதா இருக்கும் போது நடக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக ஆட்சியில் தடையின்றி நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலையை காக்க போராடும் பா.ஜ.க மேற்கு தொடர்ச்சி மலையை கேரளா வெட்டி எடுத்துட்டு போறதுக்கு ஏன் எதிராக போராட வரவில்லை. பா.ஜ.க, காங்கிரஸ் எனக்கு எதற்கு?” என்று ஆவேசமாகப் பேசினார்.