நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (11-02-26) போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலசங்கத்தினர் சுமார் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலசங்கத்தினர் சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 10வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். அப்போது காவல்துறையினர், சீமானை இடைமறித்து அந்த இடம் போராட்டத்திற்கு உகுந்த இடமல்ல, ஏற்கெனவே அவர்கள் அனுமதியின்றி தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே அவர்களுடன் இந்த போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்தனர். அப்போது சீமான், நான் இந்த நாட்டில் தானே இருக்கிறேன், ஏன் எனக்கு உரிமை இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து சீமானுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து சீமான் உள்பட 500க்கும் மேற்பட்ட ஊரக துறை பணியாளர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதனை தொடர்ந்து அடுத்த 10 நிமிடத்தில் கைது செய்யப்பட்ட இடத்திலேயே சீமான் மீண்டும் அங்கு இறக்கி விடப்பட்டார். இதையடுத்து அவர் தன்னுடைய காரில் ஏறிப் புறப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/seemanarrest-2026-02-11-16-53-57.jpg)