நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு கடந்த 12/09/2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது திருமணம் செய்வதாகக் கூறி தன்னை சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சார்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் தன்னை பாலியல் தொழிலாளி எனவும் சீமான் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதில், முதலில் சீமான் தரப்பு மன்னிப்புக் கோரும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம் என தெரிவித்த உச்சநீதிமன்றம், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து விசாரணையை ஒத்தி வைத்தது. தொடர்ந்து வீடியோ வெளியிட்டிருந்த நடிகை விஜயலட்சுமி சீமான் மன்னிப்பு கேட்டு இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதில் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மன்னிப்பு கோரப்படவில்லை. நீதிமன்றம் சொன்னபடி சீமான் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்துள்ள நடிகை தரப்பு, அதில் கூட சீமானின் பதிலில் வன்மம் தான் தெரிகிறது என தெரிவித்துள்ளது. இதனைக் கேட்டு கொண்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகரத்னா,மகாதேவன் அமர்வு இன்னும் எவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பீர்கள். ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இருவரும் குழந்தைகள் இல்லை என்பதை நினைவில் கொள்க. இருவரும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து சீமான் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.