கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கூறியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நிலையில் ஏன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார் எனக் கேள்வி எழுப்பி, தமிழக அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13-10-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்த முறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதுமே ஏற்பது இல்லை. ஏனென்றால் அது மாநில உரிமைக்கும், மாநில தன்னாட்சிக்கும் எதிரானது. ஒரு அவமதிப்பாக தான் நான் பார்க்கிறேன். எங்களுடைய காவல்துறை விசாரணையில் அரசு தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?. சிபிஐயில் இருக்கிற அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளை இருக்கா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த ஒரு பெரிய வழக்கு நியாயத்தை பெற்று கொடுத்திருக்கிறதா?.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை இந்த மாதிரி அமைப்பு எல்லாம் தனித்து அதிகாரம் கொண்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம். அது ஆட்சியாளர்களுடைய ஐந்து விரல்களை போல தான் இருக்கும். அதனால் அதைப் பேசி பயன் இல்லை. எங்களது சிறந்த காவல் படையை நீங்கள் அவமதிக்கிறீர்களா?. இந்த விசாரணை நாளையில் இருந்து தொடங்குமா? சிபிஐ இரண்டு மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்து ஒரு முடிவுக்க் கொண்டு வருமா?. இந்த மாதிரி விசாரணையை அமைப்பதும், ஒரு கமிஷனைப் போடுவதும், நீதிபதி தலைமையில் விசாரணையை அமைப்பதும் எல்லாம் டேக் டைவர்ஷன் மாதிரி தான்” என்று ஆவேசமாகப் பேசினார்.