மதுரை மாவட்டம்  விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி (10.07.2025) ஒரு மாநாடு நடைபெற்றது. இதற்காக சுமார் 2000 கிடை மாடுகள், ஆடுகள், எருமை மாடுகள், செம்மறி ஆடுகளும்  மாநாட்டுத் திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டன. வனத்துறையினருக்குச் சொந்தமான நிலத்தில் ஆடு மாடுகளை மேய்க்கக் கூடாது என்கிற தடையை நீக்க வேண்டும். ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமையை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.

அதாவது இந்த மாநாட்டு மேடைக்கு முன்புறமாக 2000 கிடை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பின்பாக நாம் தமிழர் கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஆடு மற்றும் மாடுகள் முன் சீமான்  உரையாற்றினார்.  அப்போது, “கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் ஆடு மற்றும் மாடு மேய்க்கும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆடு மற்றும் மாடு மேய்க்கும் போராட்டம் இன்று (03.08.2025) நடைபெற்றது.

இதற்காக சுமார் ஆயிரத்திற்கு கிடை மாடுகள் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று 200க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டன. அப்போது கையில் கம்புடன் தடையை மீறி மாடுகளை ஓட்டிச் சென்று சீமான் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் மாடு மேய்ப்பவர்கள், நா.த.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக முந்தல் பகுதியிலிருந்து அடப்பாறை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம்  வரை 5 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுக் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தேனி மாவட்ட எஸ்பி. சிநேகப்பிரியா தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் போது வனப்பகுதிகளில் மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முறைப்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமையை அரசு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக போடி பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சன்னாசி என்பவர் வனக்காவலர்களால் தடுக்கப்பட்டுத் தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டி வந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்துவேன் எனச் சீமான் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.