நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் மதுரையில் ‘ஆடு மாடுகள்’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் முன்னிலையில் சீமான் பேசியிருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சோலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் ‘மரங்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தர்மபுரியில் ‘மலைகளின் மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார். அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் கடல் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சீமான் இன்று தூத்துக்குடிக்குச் சென்றார். அதன் ஒருபகுதியாக, கடல் மாநாடு நடைபெறவுள்ள திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் மீனவர்கள் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவ மக்களைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து மாநாடு நடத்த ஆய்வு செய்வதற்காக திடீரென, சீமான் தனது படைகளை திரட்டி படகில் ஏறி கடலுக்குச் சென்றார்.