கோப்புப்படம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று (04.01.2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டை யார் நாசம் செய்வது என்பதில் தான் திமுக அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. திமுகவுக்கு மாற்று அதிமுக என்பது வெறும் வார்த்தையில் தான் இருக்கிறது. கொள்கையில் கோட்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது எனத் தெரிவித்தார். மேலும் அந்த பேட்டியில், “கொள்கையில் என்ன மாற்று இருக்கிறது? இரண்டு பேருமே திருடர்கள் தான். நீங்கள் அண்ணா பல்கலைக்கழகம் என்றால், அவர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என்பார்கள்.
நீங்கள் பொள்ளாச்சி என்றால், அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் என்பார்கள். அப்போது இரண்டு பேருமே சம அளவு அயோக்கியர்கள். இதில் எங்கே மாற்று உள்ளது. இரண்டே கட்சிக்குத் தான் போட்டி. அதாவது யார் அதிகமா திருடுவது; யார் அதிகமாகக் கொள்ளை அடிக்கிறது; யார் அதிகமாக நாட்டை நாசம் செய்வது என்பதில் தான் போட்டி உள்ளது. வேறு எதில் என்ன போட்டி இருக்கிறது. எங்களை (நா.த.க.) போலத் தொடர்ச்சியாக மாறுதலுக்காகப் போராடிக் கொண்டு இருக்கக் கூடிய பிள்ளைகள் தான் மாற்றாக இருக்க முடியும்” எனப் பேசினார்.
Follow Us