தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (23-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆரை கொண்டு வரும் மம்தா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருக்கிறது?. பூத் லெவல் ஆபிசரை போட்டது யார்?. திமுக தானே?” என்று ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

உடனே ஆவேசப்பட்டு எழுந்து நின்ற சீமான், “உனக்கு என்ன தம்பி பிரச்சனை? டேய், அரசு தேர்தல் ஆணையத்தை கேட்கிறதா? தேர்தல் ஆணையத்தை, அரசு கேட்கிறதா? முதலில் உனக்கு என்ன பிரச்சனை? இங்கே தள்ளி வா... காமெடி பன்னிட்டு அலையாதீங்க...” என்று கோபமாகப் பேசினார். அப்போது, நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டிருக்கிறதே? என அந்த செய்தியாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், “நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என்று வழக்கு போட்டார்களா?” என்று கூறி அந்த செய்தியாளரை நோக்கி, “உன்னை இன்னைக்கு இல்ல, ரொம்ப நாளா பார்க்கிறேன். உனக்கு எதாவது பைத்தியம் ஆகிடுச்சா? கேள்வி கேள்வியா கேளு” என்று கோபப்பட்டு பேசினார்.

Advertisment

அதற்கு அந்த செய்தியாளர், “மரியாதையா பேசுங்க..” என்று கூற உடனே சீமான், “டேய் நீ முதல்ல, மரியாதையா கேள்வி கேளுடா.. கேள்வி கேட்க வேணாம் நீ முதல்ல போடா. ஒரு மைக்கை தூக்கிட்டு கேமரா எடுத்துட்டு வந்தா பெரிய வெங்காயமாடா?. போடா...” என்று ஒருமையில் அநாகரிகமாகப் பேசினார்.