சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தைக் கைவிடக் கோரியும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தக் கோரியும், தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக சென்னை மாநகராட்சியின் நுழைவு வாயில் அருகே கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக, அதிமுகவைப் போலவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு 6 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் இன்று (10-08-25) ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நகரத்தை சுத்தமாக்குகிற பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? அப்படியென்றால் இந்த மாநகராட்சி ஒன்று எதற்கு இருக்க வேண்டும்?. தமிழ்நாட்டினுடைய முதன்மை நகரங்களை குறிப்பாக தலைநகரை தூய்மையா வைத்துக்கொள்ள வேண்டும் என்று ராம்கி என்ற நிறுவனத்துக்கு ஒரு ஆந்திராவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு தனியார் நிறுவனத்துக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறதா?. அந்த நிறுவனத்துக்கு அரசு எவ்வளவு கொடுக்கிறது?. ஒரு மாதத்துக்கு ரூ.270 கோடி என ஆண்டுக்கு ரூ.2700 கோடி கொடுக்கிறது. 12 ஆண்டுக்கு மேல் வேலை செய்துவிட்டார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது என்ன இடையூறு இருக்கிறது?.

Advertisment

வீடு தேடி அரசு என்கிறார்கள். இந்த அரசு போராடிட்டு இருக்கிற வீடுகளுக்கு ஏன் வரவில்லை?. உங்களுடன் ஸ்டாலின் சொல்கிறார்கள். போராடுகிற எங்களுடைய மக்களோடு ஏன் ஸ்டாலின் ஐயா வரவில்லை?. மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வயித்தில் அடிக்கிறதுக்கு ஒரு கொள்கை முடிவா?. அவன்  வேலையை பறிக்கிறது ஒரு கொள்கை முடிவா?. இது கொள்கையா? இல்ல கொள்ளையா?” என்று ஆவேசமாகப் பேசினார்.