தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழக அரசு சார்பில் நேற்று (26-09-25) சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழரசன் பச்சமுத்து, “சச்சின் டெண்டுகல் படித்தாரா? இளையராஜா படித்தாரா? ஏ.ஆர்.ரஹ்மான் படித்தாரா என்று நிறைய பேர் சொல்வார்கள். அவர்களை நம்பாதீர்கள். அப்படி ஜெயித்தவர்கள் 100 பேர் தான். ஆனால், படித்ததனால் ஜெயித்தவர்கள் தான் இங்கே அவ்வளவு பேர் இருக்கிறோம். நீங்கள் அதை பின்பற்றுங்கள். Exceptional எப்போதும் Example ஆகாது” என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதையே நீங்கள் காதில் வாங்கவில்லை. ஒரு படத்தை எடுத்துவிட்டால் கல்வி அறிஞர் என்று நினைத்து கருத்து சொல்லிவிடுகிறீர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதே உங்களுக்கு புரியவில்லை. நீ அந்த மேடையில் நின்று பேசியதற்கு நீ யார்? ஒரு படத்தை இயக்கி இருக்கிற ஒரு இயக்குநர் அவ்வளவு தான். அதற்கு என்ன காரணம், நீ படித்த கல்வியா?. தனித்திறனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். முழு பேச்சையும் கேட்பதில்லை. ஏதோ கேட்டுவிட்டு ஒரு கருத்தை சொல்லி கைதட்டு வாங்கிடனும்.
முதல்வரும், துணை முதல்வரும் வாங்குன கல்வி தகுதி என்ன?. மோடியோட கல்வித் தகுதி என்ன?. உங்கள் கல்வித் தகுதியை வெளியிடுங்கள் என்று மஹுவா மொய்த்ரா கேட்கிறாரே! என்னுடன் வகுப்பு தோழர் படித்து வழக்கறிஞர் ஆகிவிட்டார் என்று தம்பி உதயநிதியே பேசுகிறார். படித்து அவர் வழக்கறிஞர் ஆகிவிட்டார், படிக்காமல் இவர் துணை முதல்வர் ஆகிவிட்டார். அதை தானே சொல்ல வருகிறீர்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு... கொண்டாடுவோம்” என்று தெரிவித்தார்.