Advertisment

“வட மாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற முயல்வது மாபெரும் அநீதி” - சீமான்!

seeman

வட மாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற முயல்வது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதோடு, பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு நீக்கும் வகையில் செயல்படுத்தும் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தமானது’ தேர்தல் நடைமுறையையே வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப்போக்காகும். 

Advertisment

அண்மையில் பீகார் மாநிலத்தில் நடந்து வந்த ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே இனி வாக்குரிமை தரப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த 36 லட்சம் பீகார் மக்களில் ஏறத்தாழ 7 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக வாக்குரிமை பெறவுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டத்தின்படி தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 2 கோடி வட மாநிலத்தவர்கள் இனி தமிழக வாக்காளர்களாக எளிதாக வாக்குரிமை பெறமுடியும். ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும். எப்படி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான எந்தவொரு தீர்மானத்தையோ, சட்டத்திருத்தத்தையோ நிறைவேற்ற முடியாதபடி, தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைத் தடுக்க முடியாதபடி சிறுபான்மையாக உள்ளனரோ, அதைப்போன்ற அவலநிலை, இனி வரும் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஏற்படும். 

Advertisment

அதன் மூலம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காத தடுப்பரணாக விளங்கிய தமிழர்களின் இறுதி ஆயுதமான ‘வாக்குரிமை பெரும்பான்மையையும்’ முற்று முழுதாக இழக்கின்ற பேராபத்தான நிலை ஏற்படும். ‘ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கில் வந்திறங்கும் வடமாநிலத்தவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதியாக நேரிடும்’ என்று நான் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த கொடுமைகள் தற்போது நம் கண்முன்னே நிகழத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச அரசியல் அதிகாரமுடைய இந்த ஒரு நிலத்தையும் நாம் இழந்துவிட்டால், அகதியாகச் செல்வதற்குக்கூட இன்னொரு தாய் நிலம் தமிழர்களுக்கு இல்லை என்ற வரலாற்றுப் பெருந்துயரத்திற்கு தமிழர்கள் விரைவில் ஆளாக நேரிடும். வடமாநிலத் தொழிலாளர்களால், தமிழ்நாட்டு தொழிலாளர்களின் ஊதிய உரிமை, பணி உரிமை ஆகியவைப் பறிக்கப்படும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து நான் போராட்டங்களை முன்னெடுத்தபோது, அதற்கெதிராக இந்திய தேசியம், கருத்துரிமை என்று பேசி வடமாநிலத்தவர் வருகையை ஆதரித்த பெருமக்கள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்?. 

eci

வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேறியவுடன் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டை வரை வழங்கியதன் விளைவே, தற்போது எளிதாக வாக்காளர் அட்டை பெறும் நிலைக்கு வந்துவிட்டனர். மற்ற அட்டைகளைப்போல வாக்காளர் அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; அது தமிழ்நாட்டின் அரசாதிகாரத்தைத் தீர்மானிக்கும் உரிமை சாசனமாகும். அதனை பறிகொடுப்பது என்பது தமிழர்கள் தங்கள் இறையாண்மையையே இழப்பதற்கு ஒப்பானதாகும். இனி, தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் ஆற்றலாக வட மாநிலத்தவரே திகழ்வர் என்பது எத்தனை பேராபத்தானது என்பதை இப்போதாவது தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சியை இனியேனும் உணர்ந்து, நீண்டகாலமாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வரும் வடவர் வருகையை முறைப்படுத்தும் ‘உள் நுழைவுச்சீட்டு முறையை’ விரைந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஒன்றே நிகழவுள்ள பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் தற்காப்பதற்கான ஒற்றைத் தீர்வாகும். 

‘இந்தியா என்பதே பல தேசங்களின் ஒன்றியம்’ என்ற இந்நாட்டின் அரசியலமைப்பின் வரையறைக்கேற்ப, மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்து, அந்தந்த மாநிலங்களும் அந்தந்த மாநில மக்களால் ஆளப்படும் சூழல் ஏற்படுத்திவிட்ட பிறகு, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற முயல்வது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் இம்முறையற்ற நடவடிக்கை பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்நாட்டின் மக்களிடம் அதிகாரப் பகைமையை மூட்டி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதைக்கவே வழிவகுக்கும். பாஜக, தான் ஆள முடியாத மாநிலங்களில், ஆட்சி - அதிகாரத்தைக் கைப்பற்றுதவற்காக, தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டி புதைக்க முயலும் இக்கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து சனநாயக ஆற்றல்களும் போராட முன்வர வேண்டும். ஆகவே, ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்‘ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 

TAMILANDU north indian voters Bihar election commision of india Naam Tamilar Katchi seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe