தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (03-10-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கரூர் சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தேவைக்காக பேசுகிறது. இறந்த உயிர்களுக்கு ஒரு வருத்தம் கூட யாரும் பதிவு செய்ததாக தெரியவில்லை. இஸ்லாமியர், சிறுபான்மையினர் வாக்குகள் எனக்கு வரும் என நினைத்து நான் பா.ஜ.கவின் பி.டீம், ஆர்.எஸ்.எஸ்ஸின் கைக்கூலி என்று திட்டமிட்டு பரப்பப்பட்டது. சீமானுக்கு வாக்களித்தால் பா.ஜ.க வந்துவிடும் என அவதூறாக பரப்புரை செய்கிறார்கள்.
அவர்களை ஏமாற்றி அந்த வாக்குகளை திமுக பெறுகிறது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுப்பதாக திமுக சொல்கிறது. ஆனால், திமுகவுக்கு பாதுகாப்பே அவர்கள் தான். அவர்களின் வாக்குகளால் தான் திமுக வலிமையோடு இருக்கிறது. பா.ஜ.க பி டீம் உள்ளது எனில் பா.ஜ.கவினுடைய ஏ.டீம் திமுக தான், ஆர்.எஸ்.எஸ்ஸாகவே திமுக உள்ளது. அவர்களுக்கு கொள்கை வேறுபாடு ஒன்றும் இல்லை. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள். ஒரு 5 ஆண்டுகள் எனக்கு கொடுத்து பாருங்கள்.
திமுக - தவெக மறைமுக டீலிங் என்ற திருமாவளவன் கூறியதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. நடிகரை பார்க்க ஒரு வந்த கூட்டம் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் கூட்டமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்கள். அங்கு ஏன் துப்பாக்கிச் சூடு நடந்தது?. மனு கொடுக்க வரும் போது கலவரம் வரும் என்று எப்படி கணித்தீர்கள்? துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு பிறகு உண்மை கண்டறியும் குழு உறங்கிக் கொண்டிருந்ததா?. கரூர் நிகழ்வு ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால் பா.ஜ.க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அக்கறை காட்டிருக்க மாட்டார்கள். நான்கு மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் பரபரப்பாக இருக்கிறார்கள். கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்க்கு ஒரு வருத்தமே இல்லையே. தவெக கேட்ட இடம் தானே வேலுச்சாமிபுரம். கூட்டத்திற்கு வந்த போது காவல்துறைக்கு நன்றி கூறிய விஜய், மரணத்திற்குப் பிறகு காவல்துறை மீதே குற்றஞ்சாட்டுவது முரணாக இருக்கிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.