திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (30-08-25) மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட நமக்கு உயிர் காற்றை தருகிற நம் தாய்க்கு நன்றி செலுத்துகிற ஒரு மாநாடு என்று தான் இதை பார்க்க வேண்டும். இந்த காட்டுக்குள் புலிகள் நுழைந்த உடனேயே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு?. இவர்களுக்கு என்ன மறை கலண்டு விட்டதா? என்று கேட்பார்கள். மறை கலண்டதால் அல்ல மறையை கற்றதால் இந்த மாநாடு.
நீரின்றி அமையாது உலகு எனில் யார் யார் யாருக்கும் வானின்றி அமையாது ஒழுக்கு என்ற எங்கள் மறை. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிலர் காடும் உடையது அறன் என்ற எங்கள் மறை தந்த வள்ளுவ பெருமகனாரின் வழியில் நின்று வளர்கிற வாழ்கிற பிள்ளைகள் என்பதால் இந்த மாநாடு. நாட்டுக்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்பவர்கள் இதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். வாக்குக்காக நிற்பவர்கள் இதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்கள்தான்தான் இந்த மாநாட்டை நடத்துவார்கள், நடத்த முடியும்.
நீ சாலையில் பயணித்து போனால் ஒன்னு மேய்ச்சல் நிலம், இன்னொன்னு நீர் தேக்கம், இல்ல காடுகள், இல்ல வேளாண் பண்ணைகள் இதை தான் நீ பார்ப்பீர்கள். இதை நான் சாதிக்கவில்லை என்றால் நான் பிரபாகரன் மகன் இல்லை. நான் உதட்டில் இருந்து இத சொல்லவில்லை, உள்ளத்திலிருந்து சொல்கிறேன், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து சொல்கிறேன். யாரும் எழுதி கொடுத்து வந்து நான் பேசவில்லை” என ஆவேசமாகப் பேசினார். முன்னதாக தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சித் தொண்டர்களை அணில் என்று விமர்சித்து வரும் நிலையில், மீண்டும் மறைமுகமாக சீமான் விமர்சி்த்துள்ளார்.