சென்னை அம்பத்தூரில் நேற்று (08-08-25) கலைஞரின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, “தமிழ்நாட்டில் கலைஞர் எதிர்ப்பு அரசியல் மட்டுமே 50 ஆண்டுகளாக இருக்கிறது. பார்ப்பனிய சக்திகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்கிற திமுகவை உடைத்து ஒரு இயக்கத்தை உருவாக்கி திரைப்படத்தில் மிகப்பெரும் புகழை பெற்ற ஒரு ஆளுமையை எதிர்ப்புறத்தில் நிறுத்தி கலைஞருக்கு எதிரான வெறுப்பு இங்கே திட்டமிட்டு கட்டி எழுப்பப்பட்டது. எம்.ஜி.ஆர் கலைஞருக்கு எதிராக விமர்சனம் செய்தார், வெறுப்பு அரசியலை விதைத்தார், திராவிட இயக்கத்திற்குள்ளே பார்ப்பனியத்தை ஊடு செய்வதற்கு காரணமாக இருந்தார், ஒரு பார்ப்பன பெண்மணியே ஒரு திராவிட இயக்கத்தின் தலைவர் ஆவதற்கு அவர் பாதை வகுத்து தந்தார் என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஒரு நன்மை வாய்தத்து என்னவென்றால் தேசிய கட்சிகள் இங்கே காலூன்ற முடியாமல் தடுக்க முடிந்தது” எனப் பேசினார்.
இவரது பேச்சு, தற்போது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. கடந்த 60 ஆண்டுகால தமிழ்நாடு அரசியல் குறித்த பேச்சில் எம்.ஜி.ஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது எனக்கு அதீதமான மதிப்பு உண்டு, அவர்களை பலமுறை பாராட்டியுள்ளேன். எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் சுருக்கவில்லை, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கலைஞரை எதிர்த்த அளவிற்கு அதிமுக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை” என்று கூறினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை கட்டியவர்கள் இவர்கள். சமூக நீதி காத்த வீராங்கனை என்று கூறி ஜெயலலிதாவிடம் வீரமணி செங்கோல் கொடுத்தார். பெரியார், அண்ணா வழியில் வந்தவர்கள் என்று பேசுபவர்கள் நீங்கள் செய்யாததை ஜெயலலிதா செய்தார். உங்களால், பொது தொகுதியில் ஒரு ஆதி தமிழ் மகனை நிறுத்தமுடியவில்லை. நீ தாழ்த்தப்பட்டவன் இல்லை, நீ தமிழன் பெரம்பலூரில் நில்லு என்று சொல்லாமல் ஆ.ராசாவை கலைஞர் நீலகிரிக்கு ஏன் கொண்டு சென்றார்?. தலித் எழில்மலையை ஜெயலலிதா பொது தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார். இதெல்லாம் தானே மாறுதல், அதை கூட நீங்கள் செய்யவில்லை. இந்த தேர்தலிலாவது பொதுத் தொகுதியில் நிறுத்துவார்களா?. திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதி கேட்டு பெறுவதற்கு திருமாவளவன் என்ன பாடுபடுகிறார்?. ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்று தான்” என ஆவேசமாகப் பேசினார்.