தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனிடையே, சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

Advertisment

அதில் அவர், “மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சி.எம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்று பேசினார். அவருடைய கருத்துக்குத் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, விஜய்யின் பேச்சுக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் பேசுவது திரைப்பட வசனம் போல் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “அவரின் இதயத்துக்குக் காயமோ, வலியோ இல்லை. அப்படி இருந்தால், அவர் பேசும் மொழியில் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அது இல்லை. விஜய் பரப்புரைக்குப் போனதால் தான் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது. அப்படி என்றால் காரணம் யார்? பேசும்போது அந்த வலியைக் கடத்திருக்க வேண்டும். அவர் பேசுவது திரைப்பட கதாநாயகன் வசனம் மாதிரி இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை இல்லை.

சி.எம் சார் என்று சொல்வதே, சின்ன பிள்ளை விளையாட்டுக்கு சொல்ற மாதிரி இருக்கிறது. முதல்வர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் அவர் அமர்ந்திருக்கிற நாற்காலிக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். சி.எம் சார் என்று சொல்வது தன்மையான பதிவாக இல்லை. இதைப் பார்க்கும் போது இறப்பை விட வலியாக இருக்கிறது. இதற்கு முன்னாடி எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இத்தனை மணி நேரம் பசி பட்டினியோடு காத்திருந்தார்கள் என்பது இல்லை. அதனால், இனி வரும் காலங்களில் இந்த முறையை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், “கரூர் நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்திற்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும். அது குறித்து அவர் வருந்த வேண்டும். விஜய்க்கு பா.ஜ.க. ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிகிறது. செந்தில் பாலாஜி ஏன் உடனே வந்தார் என்பதை விட விஜய் ஏன் அங்கு செல்லவில்லை என்பதுதான் கேள்வி. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை எடப்பாடி பழனிசாமி கண்டுபிடிக்காதது என்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.