தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், கரூரில் நடந்த சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி தவெக கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, விஜய் மீது ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்து விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் முக்கிய காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “விஜய்க்கு ஆதரவாகத் தான் பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் குறித்த விசாரணைக்கு வந்த பா.ஜ.க கூட்டணிக் குழு விஜய்க்கு ஆதரவாக பேசியது. தம்பி விஜய் வந்ததால் தான் அந்த கூட்டம். அப்ப அவர் தான் முக்கிய காரணம். அப்படி இருக்கும் போது அவர் வருத்தம் தெரிவித்தால் இந்த விவகாரம் முற்றுபெறும்.

ஆனால், காவல் துறையும் அரசும் ஏற்க வேண்டும், தன் மீது எந்த குற்றம் இல்லை என்று சொல்லும் போது தான் சிக்கல் வருகிறது. இரண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இருவரும் மாறி மாறி ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போடும் போது தூரமாக இருந்து பார்க்கும் நமக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. இது அந்த உயிரிழப்பை விட கொடுமையாக இருக்கிறது. பா.ஜ.க அவரை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வர வைப்பதற்கு முயற்சி செய்கிறது” என்று கூறினார்.

Advertisment

முதலில் விஜய்யை ஆதரித்துவிட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்?  என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் அரசியலுக்கு வரும் போது அவர் எடுத்து வைக்கிற கொள்கைகள் எங்களுக்கு முரண்பாடு இருந்தது. மாநாடு வரைக்கும் வாழ்த்து செய்தி தான் போட்டேன். ஆனால் மறுபடியும் திராவிட சிந்தாந்தத்தை எடுத்து வந்தார். தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என்று பேசியது தான் இன்னும் கொடுமையானது” என்று தெரிவித்தார்.