Seeman said The AIADMK alliance is the only option for the PMK
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டில் இன்று (07-01-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுக மீது அதிமுக ஊழல் குற்றச்சாட்டு வைப்பதும், அதிமுக மீது திமுக ஊழல் குற்றச்ச்சாட்டு வைப்பதும், மாறி மாறி குறை சொல்வதும் எவ்வளவு பெரிய கொடுந்துயரம். தேர்தல் வரும் போது வழக்கமாக நடக்கும் வேடிக்கை தான்” என்று கூறினார்.
இதையடுத்து அவரிடம், அதிமுக -பா.ம.க கூட்டணி உறுதிவிட்டதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த கூட்டணி எதிர்பார்த்தது தான். ஏற்கெனவே பா.ம.க அதிமுகவுடன் இருந்துள்ளது. அவர்களுக்கு இது மட்டும் தான் வாய்ப்பு. அதனால் இந்த கூட்டணிக்கு போவார்கள் என்று எதிர்பார்த்தது தான்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஒவ்வொரு பொங்கலுக்கும் ரூ.3,000 கொடுத்திருக்க வேண்டும். கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3,000 கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் பொங்கலாக இருக்கிறது. ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடுகிறார்கள். அதை கொடுக்க முடியவில்லை. செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல காலமாக போராடி வந்த ஜாக்டோ ஜியோவின் பழைய ஓய்வூதிய கோரிக்கையை இப்போது நிறைவேற்றிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது.
இது மக்கள் அரசியலாக இல்லை, தேர்தல் அரசியலாக தான் இருக்கிறது. இவ்வளவு காலமாக கொடுக்காமல் இப்போது 30 லட்சம் மடிக்கணினியை கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us