Seeman reprimanded the volunteers at rain
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் மதுரையில் ‘ஆடு மாடுகள்’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் முன்னிலையில் சீமான் பேசியிருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சோலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் ‘மரங்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தர்மபுரியில் ‘மலைகளின் மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தினார்.
இந்த நிலையில், திருநெல்வேலி கூத்தன்குழி பகுதியில் ‘கடலம்மா’ மாநாடு சீமான் இன்று (21-11-25) நடத்தினார். இந்த மாநாட்டில் சீமான், கடல் மனிதருக்குச் செய்யும் நன்மைகள் குறித்தும், நாம் கடலை சீரழிப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மழை பெய்தது. இதனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், மழைக்கு ஒதுங்கி தங்களது நாற்காலியை தலை மீது வைத்தனர். அப்போது சீமான், “மழை தான்யா, கடலம்மாவை பற்றி பேசும்போது மழை பெய்யலனா, அப்புறம் என்னடா மரியாதை இருக்கு. நீ நனைஞ்சா முளைச்சு போறதுக்கு வெங்காயமும் இல்லை, விதையும் இல்லை. உட்காரு.. உட்காரு. டேய் மழைக்கு மரியாதை கொடுக்க கத்துக்கடா.. நாற்காலிய கீழே இறக்குடா., கீழே போட்டு உட்காருடா” என்று பேசினார்.
Follow Us