தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் சென்னை எழும்பூரில் இன்று (17-11-25) போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தகுதி வாய்ந்த வாக்காளர்கள் என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள்?. போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். இத்தனை நாள் கோமாவில் இருந்தார்களா?. ஜனநாயக நாட்டில் குடியாட்சியை ஏற்றுக்கொண்ட நாட்டில், வாக்குரிமை தான் மக்களுக்கு இருக்கிற மதிப்புமிக்க உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால், இது எந்த மாதிரியான நாடு?. இந்த நாட்டு குடிமக்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றால், ஓராண்டுக் காலம் அவகாசம் எடுத்து அதை முறையாக சீர்திருத்தம் செய்திருக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது பெயர் இல்லாதவர்கள் மீண்டும் சேர அவகாசம் இல்லை. அப்படியென்றால் நீங்கள் வெளியிடுவது தான் பட்டியல்.

Advertisment

இதுவரை, வாக்கு பெற்றிருக்கிற மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களைத் தேர்வு செய்தார்கள். ஆனால், இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள். அதிமுக பெரிய அமைப்பு, எல்லா இடத்திலும் கிளை இருக்கிறது உறுப்பினர் இருக்கிறார்கள். எங்களைப் போன்ற வளர்ந்து வருபவர்கள் என்ன செய்ய முடியும்? இதன் மூலம் குறைந்தது ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள். இந்த நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது?. ஒருவர் இரண்டு இடத்தில் வாக்கு செலுத்துவது, இறந்துவிட்டார்கள் எல்லாம் பல காலமாக பட்டியலில் இருக்கிறது இதெல்லாம் உண்மை. அதை மட்டும் கண்டுணர்ந்து நீக்குவது தானே சரியான திருத்தமாக இருக்க முடியும்?. அந்த படிவம் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் எளிதில் பூர்த்தி செய்யக்கூடாது என்பதற்காக அது இருக்கிறது. நான் ஏற்கெனவே வாக்குரிமை பெற்று இருக்கிறேன். பிறகு ஏன் சோதிக்கிறீர்கள்?” என்று ஆவேசமாகப் பேசினார்.