திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், குடமுழுக்கின் போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (28-06-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழில் மட்டும் வழிபாடு செய்வதில் என்ன பிரச்சனை?. தமிழில் குடமுழுக்கு என்பது தமிழர்களின் உயிர் உரிமை. ஒவ்வொரு தேசிய இனங்களின் உயிர் உரிமை அவனுடைய மொழி. இது என் நாடு என்பதற்கு தமிழ்நாடு என்ற பெயரை தவிர வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா?. தமிழே இல்லையென்றால் அது எப்படி தமிழ்நாடு ஆகும்?. தன்னுடைய தாய்மொழியில் தன் இறைவனுக்கு முன்பு வழிபாடு செய்யமுடியாது, வழக்காட முடியாது, படிக்க முடியாத என்ற நிலையை பெற்றிருக்கிறது என்றால் அந்த இனம் உலகின் மிக கீழான அடிமை இனம். சொல்லும் போது தமிழ் கடவுள் என்கிறீர்கள், தமிழில் வழிபாடு செய்வதில் எதற்கு வலிக்கிறது?. அது என்ன தமிழிலும் குடமுழுக்க நடத்தப்படும் என்கிறீர்கள்? என்ன பிச்சை போடுகிறீர்களா?.
கலைஞர் தான் தமிழ் கடவுள் என்று சொல்வதை கேட்டுக்கொண்டு இந்த மக்கள் இருக்கிறார்கள். தன்னலவாதிகள் பெருகி போகி அற்ப பதவிக்கு அழைகிற கூட்டம் பெருகி போனதால் இந்த இனம் அவமானப்பட்டு கிடக்கிறது. இந்த இனம் தான் உலகத்தில் தன்மானத்திற்கு இயக்கம் கண்டது, சுயமரியாதைக்கு இயக்கம் கண்டது. இன்றைக்கு அவமரியாதை சின்னமாக அவமானத்தின் அடையாளமாக இருக்கிறது. அற்ப ஒரு சீட்டு இரண்டு சீட்டு ஒரு வாரிய பதவிக்கு போய் முட்டிக்கால் போட்டு நின்றுக்கொண்டு கேவலப்பட்டு அதைவிட கொடுமை அவனுக்கு வக்காலத்து வாங்கி பேசுவது. எல்லா அநீதியையும் சகித்துக்கொண்டிருப்பதற்கு பேர் தான் ஜனநாயகம் என்றால் அது எப்படி?. செம்மொழி என்று கலைஞர் பிறந்தநாளில் கொண்டாட வேண்டும் என்கிறீர்கள். செம்மொழிக்கும் கலைஞருக்கு என்ன சம்மந்தம்?” என்று ஆவேசமாகப் பேசினார்.