மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் இருமல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பா.ம.க நிறுவனர் ராமதாஸும் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ் மற்றும் வைகோவை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் திரைப்பட இயக்குநர் சேரனும் வந்திருந்தார். வைகோ மற்றும் ராமதாஸை சீமான் நலம் விசாரித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.