நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (01/08/2025) அவரது உடல் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கவினின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி நாம் தமிழர் கட்சியின் சீமான் நேரில் கவினின் உடலுக்கு வீரவணக்கம் சொல்லி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில்,  ''புதைக்கின்ற இடமே தனித்தனியாக இருக்கிறது. சாதி பார்த்து மழை பெய்வதில்லை ஆனால் இவர்கள் குளத்தில் அந்த இடத்தில் தண்ணீர் பிடிக்கணும், கிணற்றில் இந்த இடத்தில் தான் தண்ணீர் பிடிக்கணும் என்றசாதி பிரிவினை ஏன்? இந்த சாதிக்காரன் இங்கே  நடக்கக்கூடாது என பூமி சொல்லவில்லை நீ ஏன் சொல்கிறாய்?

செத்தாலும் தமிழனுக்கு சாதி போகாது என்றால் இந்த சமூகத்தை ஒன்றுமே செய்ய முடியாது ரொம்ப கடினம். நான் ராமநாதபுரம், சிவகங்கைக்காரன் என் ஊரிலேயே இதுபோல கிடையாது. கொடுமையாக இருக்கிறது. தன் இனப்பகையாலே வாழ்ந்து வீழ்ந்த சமூகம். ஒரே காற்று, ஒரே தண்ணீர், ஒரே மொழி பேசும் மக்களிடம் இதென்ன இவ்வளவு பகை. இங்கு கவினை சாதி கொலை செய்துள்ளது. அங்கு அஜித்குமாரை சட்டம் கொலை செய்துள்ளது. அஜித்தை கொலை செய்தது சட்டம் அதனால் எல்லாம் வந்தார்கள். ஏன் கவினுக்கு யாரும் வரவில்லை என்றால் இது வாக்கு. இரண்டு சமூகத்தின் வாக்கும் வேண்டும் என அரசு துடிக்கிறது. எல்லாவற்றையுமே ட்டாக பார்த்தால் நாட்டைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். எல்லாவற்றையும் வாக்காக பார்த்தால் மக்களின் வாழ்க்கையைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். 

எனக்கு அதிகாரம் இருந்தால் இதெல்லாம் நடக்குமா? ஒரு கொலை நடந்து விட்டால் கொலையை நிகழ்த்தியவனின் சான்றிதழ் செல்லாது, குடும்ப அட்டை செல்லாது, வாக்காளர் உரிமை கிடையாது. கொலை செய்வோரின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது நீ உன் சாதிப்பெருமையே பேசி வாழ்ந்துக்கோ அரசு எதுவும் உனக்கு தராது என சட்டம் போட்டு நிறுத்திவிட்டேன் என்றால் தொடுவானா? இந்த தலைமுறையில் படிச்சி சாதிக்க வேண்டும் என இருந்த இளைஞனை சாதி கொலை செய்யும் என்றால் என்னதான் செய்வது?'' என்றார்.