மன்னிப்பு கோரும் மனுவை சீமான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது திருமணம் செய்வதாகக் கூறி தன்னை சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சார்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் தன்னை பாலியல் தொழிலாளி எனவும் சீமான் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதில், முதலில் சீமான் தரப்பு மன்னிப்புக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.