சீமான் ஒரு கிணற்றுத் தவளை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான்,''திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு புதுமணப்பெண் ரிதன்யா உயிரிழப்பு தொடர்பாக ஏன் இந்த மாதர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என யாருமே குரல் கொடுக்காமல் போய்விட்டனர். எங்கே போனீர்கள் எல்லோரும்?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியதோடு, 'மாதர் சங்கத்தினர் எல்லாம் போதைப்பொருள் உண்டுவிட்டு படுத்து விட்டீர்களா?' என சீமான் கேள்வி எழுப்பி இருந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை கிணற்றுத் தவளை என்று குறிப்பிட்டுள்ள அவர்,' கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று கருதிக்கொள்ளும். அதுபோல சீமான் என்ற தவளை தன்னைத் தவிர தமிழ்நாட்டில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக்கொண்டு திரிகிறது. மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போய் இருக்கலாம்' என பதிவிட்டுள்ளார்.